| 0 Kommentare ]


பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண்ணானால் அதனைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் இல்லை. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பது மீறிப் பிறந்துவிடும் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது எல்லாம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள நடைமுறைகள்.

அவ்வாறு கருவிலேயே கட்டவிழ்த்து விடப்படும் பெண் மீதான வன்முறைகள் கல்லறை வரைக்கும் தொடர்கின்றன.

தாய்வழிச் சமூக அமைப்பில் உயிர் உற்பத்தியிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குதலும் சம உரிமையோடும், சுதந்திரமாகவும் செயற்பட்ட பெண்கள் நிலவுடமைச் சமூக அமைப்பில் துணை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினரின் அனேக சடங்குகள் பெண்களை மையமாக வைத்தே கொண்டாடப்பட்டன. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஒழுக்கக் காவலர்களாகவும் பெண்களே இருக்க வேண்டும். போன்ற கருத்துக்கள் எல்லாம் பின்னாளில் தோற்றம் பெற்றவைதான். பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகளில் முக்கியமானவை ‘பூப்புனித நீராட்டு விழாக்கள், பெண்கள் மறு உற்பத்திக்குத் தயாராகிவிட்டதை உலகுக்கு உணர்த்தும் விழாவாகவே அது இன்று இருக்கின்றது.

பெண் பூப்படைதல் என்பது பல சமூகங்களில் கொண்டாட்டத்திற்குரியதாகவே இருந்திருக்கின்றது.

புதிய உலகத்தில்

பெரிய மனுசியாய்

கடமைகளுடன்

கால்தடம் பதிக்கிறாய்

வா

பெருமையுடனும்

மரியாதையுடனும்

வலிமை பொங்க

நடந்துவா

இன்று முதல்

நீ

நம் மக்களின் தாய்

நம் தேசத்தின் தாய்

பெண் பூப்படைதலைப் பெருமையுடன் பேசும் அப்பாச்சி இனப் பாடல் இது. முன்னைய காலங்களில் பூப்படைதல் தீட்டானதாகக் கருதப்படவில்லை. ஆனால் தந்தை வழிச் சமூக அமைப்பின் தோற்றத்தின் பின்னரே பூப்படைதல் என்பது தீட்டாகிப்போகிறது.

பெண் குழந்தை பெறுவதற்கு உடல் ரீதியாகத் தகுதிபெற்று விட்டதும் பூப்படைகின்றாள் பூப்பெய்தியதும் மாதா மாதம் அவளுக்கு மாதவிலக்கு ஏற்படுகின்றது. அவளது சினைப்பையில் உருவாகும் முட்டை கருத்தரிக்காத சமயங்களில் ஒரு சக்கரமாக ஒவ்வொரு மாதமும் அழிவடைகின்றது. முட்டை உடைந்து அழிவடையும் போது, சூழ உள்ள இழையங்களும் சிதைவடைந்து குருதியோடு வெளியேறுகின்றது.

அவ்வாறு மாதா மாதம் குருதி வெளியேறுவதாலேயே அது அசுத்தமானதாகக் கருதப்பட்டு ‘தீட்டு’ என்பதாகப் பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர்.


பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே, பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்று விட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் ஒரு பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்த பெண்களும் பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் அவரையும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

இச்சடங்கு குறித்த பதிவை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது. தாய் மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பெண்ணுக்கு பாலியல் உணர்வு ஏற்படுவதாகக் காட்டப்படும் காட்சி வரை உண்மை, பொய் அனைத்தையும் கலந்து கட்டிய பெருமை தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

இலங்கையில் மட்டுமல்லாமல் புலம்பெயர் வாழ்வில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சடங்குகளில் முக்கியமானது பூப்புனித நீராட்டு விழா.

போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் தங்கள் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடாத்துவதில் பெற்றோர் முனைப்புக் காட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் பெண்ணின் பெருமை பேசுவதாய் அமைந்த இவ்விழா பின்னர், மாதமொரு தடவை அவள் தீட்டானவளாக விலக்கானவளாக ஆவாள் என்பதை உலகுக்கும் பறைச்சாட்டும் விழாவாக மாற்றம் பெற்றிருக்கின்றது.

இவ்வாறான சடங்குகளை கேள்விக்குட்படுத்தாமல், நாம் கொண்டாடிக் கொணடிருப்பதன் காரணம் என்ன?

பெண்ணுரிமை பேசுபவர்கள், பெண் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள், இவ்வாறான சடங்குகள் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

0 Kommentare

Kommentar veröffentlichen